காஜாங், 05 அக்டோபர் (பெர்னாமா) -- புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நான்கு வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்பது நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார்.
பொது சேவை துறை ஊழியரான 48 வயதுடைய அவ்வாடவர் இன்று காலை மணி
11 அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
இன்று, காஜாங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரிடன் உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏ.சி.பி நாஸ்ரோன் அறிக்கை ஒன்றில் கூறினார்.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி லாரி, கார் உட்பட விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் இரண்டு என நான்கு வாகனங்களை உட்படுத்திய இவ்விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த வேளையில் எழுவர் காயங்களுக்கு ஆளாகினர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41(1)இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு, 42 வயதுடைய லாரி ஓட்டுநரை கடந்த அக்டோபர் முதலாம் தேதி வரை போலீசார் தடுத்து வைத்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]