புக்கிட் மெர்தாஜாம், 05 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு முழுவதும் இதுவரை 700-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கைகளை கல்வி அமைச்சு நிறைவுச் செய்துள்ளது.
இச்செயல்முறை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு தணிக்கை அறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
''பள்ளிகள் தொடர்ந்து கவனத்தைப் பெறுவதை உறுதி செய்வதில், குறிப்பாக பாதுகாப்பின் அம்சங்களில் கல்வி அமைச்சு எவ்வாறு உறுதியாக உள்ளது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம். எனவே, இந்த தணிக்கை நிச்சயமாக அவ்வப்போது நாம் மேம்படுத்த வேண்டியவற்றில் சில அணுகுமுறைகளையும் முழு கவனத்தையும் நமக்கு வழங்கும். குறிப்பாக நமது பள்ளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக,'' என்றார் அவர்.
இன்று, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், பெனாந்தி, யயாசான் அமானில் பகடிவதை எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒட்டுமொத்த மாணவர் நலனை கருத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு கவனம் செலுத்தப்படுவதாக ஃபட்லினா குறிப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை தேசிய அளவிலான ஆசிரமப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற ரக்பி விளையாட்டுப் போட்டியில் மாணவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய பள்ளி விளையாட்டு நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதில் அனைத்து பாதுகாப்பு அம்சத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று ஃபட்லினா தெரிவித்தார்.
''மாணவர்களுக்கு சுகாதார அம்சக்கூறுகள் குறித்து முன்கூட்டியே நினைவூட்டப்பட்டுவிட்டன. மேலும் பெற்றோரிடமும் மாணவர் குறித்த சுகாதாரத் தகவல்களைக் கேட்டறிந்துள்ளோம். எனவே எதிர்காலத்தைப் பொறுத்தவரை, எங்கள் கவனம் மாணவர் பாதுகாப்பு நலனில் முழுமையாக இருக்கும். குறிப்பாக அது விளையாட்டின் வகையைப் பொறுத்தது என்பதோடு போட்டியின் சூழலை உட்படுத்தி மருத்துவக் குழுவின் முன்தயாரிப்பும் இதில் அடங்கும்,'' என்றார் அவர்.
இதனிடையே, தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அமைச்சு எப்போதும் நினைவூட்டுவதையும் ஃபட்லினா சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]