செர்டாங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- சிலாங்கூர், செர்டாங் இருதய மையத்தில் மேலும் இரண்டு துளையிடும் இருதயவியல் ஆய்வகங்கள், ICL-ஐ அமைக்க சுகாதார அமைச்சு, KKM திட்டமிட்டுள்ளது.
அவை, 2026-ஆம் ஆண்டு முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் கூறினார்.
அரசாங்க மருத்துவமனைகளில் இருதய சிகிச்சையை வலுப்படுத்தவும், நாட்டின் முதன்மை உயிர்கொல்லி நோயாக இருக்கும் இருதய நோயைத் தடுப்பதில் கவனம் செலுத்தவும், இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
''ஆம். நாங்கள் செர்டாங் இருதய மையத்திலும் அதிகரிக்கவிருக்கின்றோம். நாங்கள் இன்னும் இரண்டு ஐ.சி.எல்-களைச் சேர்ப்போம். இது 2026-ஆம் ஆண்டில் அமைக்கப்படும். 2027-இல் செயல்படுத்தப்படும்,'' என்றார் அவர்.
சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு மடானி இருதய தின விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
சிகிச்சை வசதிகள் அல்லது இருதயப் பரிசோதனை திட்டங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சுல்கிப்ளி,
செர்டாங், சிலாங்கூர், பினாங்கு மற்றும் சரவாக் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் கடுமையான சிகிச்சை வசதிகளை வலுப்படுத்துவதன் மூலம் சுகாதார அமைச்சு பன்முக அணுகுமுறையை கொண்டு வருவதாக, விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)