சிப்பாங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- இஸ்ரேலிய படையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் GLOBAL சுமாட் நுசாந்தாரா, ஜி.எஸ்.எஃப் மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற மலேசியர்களை, மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்களின் வழி மீட்பதற்கு மலேசியா தயாராக உள்ளது.
ஜி.எஸ்.எஃப்-இல் பங்கேற்ற ஆர்வலர்களை விடுவித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருக்கும் ஜோர்டன், துருக்கி, எகிப்து, அல்ஜீரியா உட்பட, பல முக்கிய நாடுகளில் உள்ள மலேசியாவின் அரசதந்திர பங்காளிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை இது உள்ளடக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
“நம்மிடம் இரண்டு வாயில்கள் உள்ளன. இரண்டு அல்லது மூன்று வாயில்கள் உள்ளன. ஆனால், எளிதான ஒன்று ஜோர்டன் நுழைவாயில், ஜோர்டனில் இருந்து கிங் ஹுசின் நுழைவாயில். அங்கிருந்து, நாங்கள் அவர்களை அம்மானிலிருந்து டோஹாவிற்கும், டோஹாவிலிருந்து கோலாலம்பூருக்கும் அழைத்து வருவோம். அல்லது அம்மானிலிருந்து நேரடியாகக் கோலாலம்பூருக்கு அழைத்து வருவோம்," என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர் சிப்பாங்கில் உள்ள சுமாட் நுசாந்தாரா கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் அவ்வாறு கூறினார்.
இஸ்ரேலிய படையால் மலேசியர்கள் விடுவிக்கப்பட்டவுடன், அவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயல்முறை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தளவாட உதவி மற்றும் தூதரக கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசிய ஆர்வலர்களை விடுவிப்பது குறித்த முடிவு, இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தது என்று முஹமட் ஹசான் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)