காஜாங் , 23 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ முனையம் 1 மற்றும் 2-இல், சுற்றுப் பயணிகளிடம் பன்மடங்கு அதிகம் கட்டணம் வசூலிக்கும் டாக்சி ஓட்டுநர்களின் நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சட்டவிரோத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்துவதற்கு முன்னர், ஒரு நிறுவனம் அல்லது தனிநபரிடமிருந்து வாகனத்தை வாடகைக்கு பெற்று, அத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
''எனவே, அந்த குழுவை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். நான் வெறுமனே சொல்கின்றேன். நீங்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது என்று நினைக்காதீர்கள். எங்களின் ஜே.பி.ஜே-வின் நடுமாடும் அறையில் சி.சி.டி.வி உள்ளது. கைது செய்யலாம் மற்றும் அவர்களின் முகத்தை அடையாளம் காண முடியும். அந்த குழுவைப் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆனால், வழக்கமாக அவர்கள் வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும் போது மட்டுமே கைது செய்ய முடியும். அதுதான் ஆதாரம். எனவே, நாங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வோம்,'' என்றார் அவர்.
அவர்களின் இத்தகைய செயல் சமரசம் செய்யப்படாது என்பதை தெரிவிக்க, தற்போதுள்ள சட்ட விதிமுறைகள் போதுமானதா அல்லது கடுமையாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து போக்குவரத்து அமைச்சு ஆராயும் என்று அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)