பண்டார் செளஜானா புத்ரா, 21 செப்டம்பர் (பெர்னாமா) -- இஸ்லாம் மார்க்கத்தையும், நபிகள் நாயகத்தின் பெருமையையும் தமது காந்தர்வக் குரலால் வெளிப்படுத்தி பலரின் இதயத்தில் இன்றுவரை நிலைத்து நிற்கும் பாடகர் நாகூர் ஹனிஃபாவிற்கான நூற்றாண்டு விழா, இன்று சிலாங்கூர், பண்டார் செளஜானா புத்ராவில் அமைந்துள்ள மஹ்சா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வார்த்தையில் அழுத்தமும், குரலில் கம்பீரமும் உடைய இவர், மதங்களுக்கு அப்பாற்றப்பட்டு இசை ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்படுவர் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட பிற மதத்தினரின் வருகையும் சான்றாக அமைந்தது.
நாகூர் ஹனிபாவின் வாழ்க்கை பயணத்தையும் படைப்புகளையும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த நூற்றாண்டு விழாவின் நோக்கமாகும்.
அந்நோக்கத்தை ஈடும் செய்யும் வகையில் இளைஞர்களின் வருகை சிறப்பாக இருந்தது என்று விழாவை ஏற்பாடு செய்த மஹ்சா பல்கலைக்கழக தோற்றுநர் செனட்டர் டான் ஶ்ரீ டாக்டர் முஹமட் ஹனிஃபா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
''இசைக்கு மொழிதான் முக்கியம். மதம் முக்கியம் இல்லை. மதத்தைக் கடந்து முஸ்லிம்களும் தமிழ் பேசக்கூடிய மற்ற மதத்தினரும் நிறைய வந்திருக்கின்றனர். நிறைய இளைஞர்களும் வந்திருக்கின்றனர். இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாங்கள் நினைத்தது நடந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் தகவல்கள் கொண்டு சேர்க்கப்படும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்,'' என்றார் அவர்.
இதனிடையே, இந்தியர்கள் தமிழ்மொழிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை இவ்விழா நிரூபித்துக் காட்டியிருப்பதாக, அதற்கு தலைமையேற்றிருந்த ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
மொழி, மதம், சமயத்தைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் என்பதற்கும் இந்த விழா மிகப் பெரிய சான்று எனவும் அவர் கூறினார்.
''தன்னுடைய இசையின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் நிரந்தரமாக இடம்பிடிக்கக்கூடிய மிகப் பெரிய கலைஞராக அவர் விளங்கினார். அனைத்து இனங்களையும் கவரக்கூடிய மாமேதையாக அவர் இருந்தார். அவர் ஓர் இஸ்லாமியராக இருந்தாலும் அவருடைய நூற்றாண்டு விழாவை அனைத்தும் இணைந்து கொண்டாடியது எந்த அளவிற்கு மதம் கடந்து மனிதநேயம் போற்றினார் என்பதை தெரிவித்திருக்கின்றது,'' என்றார் அவர்.
இவ்விழாவில் தலைமையுரையாற்றியப் பின்னர், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், நாகூர் ஹனிபாவை நினைவுக்கூருவதற்கு இந்த நூற்றாண்டு விழா தங்களூக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருப்பதாக இதில் கலந்து கொண்ட சிலர் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தனர்.
இந்தியா மற்றும் உள்ளூர் கலைஞர்களும் இணைந்து வழங்கிய நாகூர் ஹனிஃபாவின் பாடல்களுடன் பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இதில் இடம்பெற்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)