கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சுலிஸ்மி எஃபெண்டி மீது பொறுப்பற்ற தரப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளதோடு இது ஒரு இழிவான செயல் என்று கூறியுள்ளார்.
அமைதியாக ஒன்றுகூடி கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை அரசாங்கம் மதிக்கிறது என்றாலும் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பல்வேறு பேரணிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பது போல அந்த சுதந்திரக் கொள்கை கடப்பாட்டுடனும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றியும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, அரசு ஊழியர்களைக் காயப்படுத்தியதன் பின்னணியில் செயல்பட்டவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் விரைவாகக் கைது செய்ய வேண்டும் என்று அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், போலீஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் நேர்ந்திருக்கக்கூடாது என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு தாம் தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினரைக் கேட்டுக் கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
''இந்த வெளியேற்றம் குறித்து நீண்ட காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது, மேலும், இப்பிரச்சினையை உடனடியாகக் கையாளுமாறு அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானியிடம் நான் கேட்டுக்கொள்வேன். இருப்பினும், URA தொடர்பான ஒரு மாநாட்டை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதோடு, நடப்பில் உள்ள சட்ட அமைப்பிற்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுப்போம்,'' என்றார் அவர்.
பாதுகாப்புப் படையினருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட குழப்பம் தொடர்பான காணொளிகளை, முகநூல், டிக் டாக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் பொதுமக்களால் பகிர்ந்து வருகின்றனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]