பாலிங், 05 செப்டம்பர் (பெர்னாமா) - இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரையில் மலேசிய குடிநுழைவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட 9,500 அமலாக்க நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 35,225 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்தது, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியது மற்றும் சுற்றுலா அல்லது தொழிலாளர் அனுமதி அட்டையை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சட்டவிரோதமான நடவடிக்கை என்று தெரிந்தும், சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாப்பதிலும் பணியமர்த்துவதிலும் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட, 1,365 முதலாளிகள் மீதும் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
"இந்த அமலாக்க நடவடிக்கையில், சட்டவிரோத குடியேறிகள் என்பது தவறு. ஆனால், அவர்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்பதை அறிந்திருந்தும், அவர்களைப் பாதுகாப்பதிலும் பணியமர்த்துவதிலும் ஈடுபட்டுள்ள முதலாளிகளின் செயல்களால் இது ஏற்படுகிறது," என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை கெடா, பாலிங்கில் நடைபெற்ற கிராம தத்தெடுப்பு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை 36,557 சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு உள்துறை அமைச்சு திருப்பி அனுப்பியுள்ளதையும் சைஃபுடின் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், தாய்லாந்தில் துப்பாக்கி கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மலேசியர்கள் குறித்து உள்துறை அமைச்சு விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
"நாங்கள் ஒரு சுயவிவரத்தை செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இது ஒரு பெரிய மற்றும் அச்சுறுத்தப்பட்ட குழுவாக நாங்கள் கருதும் மோசடி கூறுகள் அல்லது குற்றங்களுடன் தொடர்புடையது அல்ல. இது இன்னும் முதற்கட்ட விசாரணைதான். விசாரணை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார் அவர்.
சந்தேக நபர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டதால், தாய்லாந்து போலீசாரும் இந்த வழக்கை விசாரித்து வரும் அதே வேளையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து உள்ளூர் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)