Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மித்ராவில் சீர்திருத்தம்; வளர்ச்சிக்கான தெளிவான, வெளிப்படையான திசையைக் கொண்டுள்ளது

02/09/2025 05:42 PM

கோலாலம்பூர், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்திய உருமாற்றப் பிரிவு, மித்ரா தற்போது வெற்றிகரமாக சீர்திருத்தப்பட்டு, இந்திய சமூகத்தின், குறிப்பாக B40 குழுவின் வளர்ச்சிக்கு மிகவும் தெளிவான, வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான திசையைக் கொண்டுள்ளது.

மித்ராவின் கீழ், செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்தையும் ஒழுங்குபடுத்தும் மற்றும் கண்காணிக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ள, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான, மித்ரா சிறப்புப் பணிக்குழுவும் நிறுவப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

''மித்ரா தற்போது முன்பை விட சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தெரிகிறது. இது மித்ரா மீது மடானி அரசாங்கம் செயல்படுத்திய உண்மையான சீர்திருத்தம். இதற்கு முன்னர், மித்ரா அல்லது செடிக் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு விளக்கத்தையும் நாம் கேட்பது மிக அரிது. ஆனால், மடானி அரசாங்கம் தற்போது மித்ரா தொடர்பான எந்த அம்சங்களையும் மறைக்கவில்லை. முன்பு போலல்லாமல், ஒவ்வொரு திட்டமும் அதன்வழி பயன்பெற்றவரின் பட்டியலும் மித்ரா வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளன,'' என்றார் அவர்.

இன்று, மேலவையில், 13-ஆவது மலேசியத் திட்டம் தொடர்பான விவாதத்தை நிறைவு செய்து வைத்தபோது ரமணன் அவ்வாறு கூறினார்.

இனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க இந்திய பிரதிநிதிகள் இல்லாதது குறித்து கருத்துரைத்த அவர், மித்ரா, மக்கள் பிரதிநிதிகள், செனட்டர்கள் மற்றும் பல்வேறு ஆலோசனை வழிமுறைகள் மூலம் அவை வழங்கப்படுவதால், அச்சமூகத்தின் குரல்களும் விருப்பங்களும் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியச் சமூகம் தொடர்பான பிரச்சனைகள் உட்பட, குரல் எழுப்பவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் போதுமான சுதந்தரத்தை வழங்கும் ஒரே பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் மட்டுமே என்றும் அவர் கூறினார்.

எனவே, கொள்கைகளை உருவாக்குவதிலும் அரசாங்க முயற்சிகளை செயல்படுத்துவதிலும் உரிய கவனம் செலுத்தப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)