ஜம்மு-காஷ்மீர், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் புகழ்பெற்ற வைஷ்னோ தேவி ஆலயத்தின் யாத்திரை செல்லும் பாதையில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 30 பேர் உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சர் ஒமார் அப்துல்லா கூறினார்.
செவ்வாய்க்கிழமை, 368 மில்லிமீட்டர், அதாவது 14.5 அங்குலம் அளவிற்குப் பெய்த கனமழையால் ஜம்முவில் உள்ள கல்வி கழகங்களை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தாவி, செனாப், ஜெலும் மற்றும் பசந்தார் ஆறுகளில் நிரம்பி வழியும் நீர், தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதாக ஒமார் அப்துல்லா தெரிவித்தார்.
இதனிடையே, மேற்கில் இருந்து தொடர்ச்சியான மழை, அரபிக் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வந்த காற்று ஆகியவையே இங்கு கனமழை ஏற்பட்டதற்கு காரணம் என்றும் வானிலை நிபுணர்கள் கூறினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]