கோலாலம்பூர், 10 நவம்பர் (பெர்னாமா) -- இன்று காலை, கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா பகுதியில் மற்றொரு நில அமிழ்வு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம், அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சாலை பயனர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலை 8.39 மணிக்கு பாம்பே ஜுவல்லரி வளாகத்திற்கு முன்பகுதியில் உள்ள போனஸ் சாலையில் நில அமிழ்வு ஏற்பட்டிருப்பதாக கோலாலம்பூர் மாநகராண்மை கழகம், டி.பி.கே.எல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
சம்பவத்திற்கான முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளவும் அப்பகுதியில் கட்டமைப்பு அபாய அளவை மதிப்பிடவும், டி.பி.கே.எல் குழு, ஆயர் சிலாங்கூர், இண்டா வாட்டர் கன்சொர்ட்டியம் நிறுவனம், IWK மற்றும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, பாதுகாப்பு கருதி பள்ளிவாசல் அருகிலுள்ள லோரோங் மஸ்ஜிட் இந்தியா 4 சாலை தொடங்கி பாதிக்கப்பட்ட பகுதிவரை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில், கோலாலம்பூரைச் சுற்றி நிகழும் நில அமிழ்வு சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
இந்நிலை, மஸ்ஜிட் இந்தியா போன்ற அதிக மக்கள் நடமாடும் பகுதிகளின் நிலத்தடி அமைப்பின் நிலை மற்றும் பழைய உள்கட்டமைப்பின் மீள்தன்மை நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இருப்பினும், பொது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் டி.பி.கே.எல் வலியுறுத்தியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]