அமெரிக்கா, 09 ஜூலை (பெர்னாமா) -- இன்று காலையில், குறைந்தது ஏழு நாடுகளுக்கும், பிற்பகலில் கூடுதல் நாடுகளுக்கும் வர்த்தகம் தொடர்பான அறிவிப்பை வழங்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பு வர்த்தக ஒப்பந்தங்களா அல்லது வரி கடிதங்கள் தொடர்பானவையா என்பதைக் குறிப்பிடாமல், டிரம்ப் அத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளையில், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரி விகிதத்தை வெளிப்படுத்தும் கடிதத்தை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பியதற்குப் பிறகு, இரண்டு நாள்கள் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளதாக, டொனல்ட் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
அண்மையில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவை மிகவும் நன்றாக நடத்தி வருவதாக, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப் கூறினார்.
"அவர்கள் நம்மை மோசமாக நடத்தினார்கள். கையாள மிகவும் கடினமானவர்களில் அவர்கள் ஒருவராக இருந்தனர். உண்மையில் பல விஷயங்களில், அவர்கள் சீனாவை விட மிகவும் மோசமாக இருந்தனர். அவர்கள் நம் நிறுவனங்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தனர். கூகுள் மீது வழக்குத் தொடர்ந்தனர், அவர்கள் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து 1,700 கோடி டாலர்களை ஒரு வழக்கில் பெற்றனர். அவர்களிடம் ஒரு வழக்கும் இல்லை. ஆனால், தற்போது அவர்கள் நம்மிடம் அன்பாக நடந்து கொள்கின்றனர். என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம். அவர்களுக்கு கடிதம் அனுப்புறதுக்கு நாங்கள் இரண்டு நாள் விடுப்பு எடுக்கலாம். நாங்கள் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். கடிதம் என்றால் ஓர் ஒப்பந்தம் என்று நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்றார் அவர்.
ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு 25 விழுக்காடும், லாவோஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு 40 விழுக்காடு வரை என 14 நாடுகளுக்கான வரி விதிப்பு தொடர்பான தகவலை, கடந்த திங்கட்கிழமை டிரம்ப் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)