கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- கருப்பைச் சரிவு... இடுப்புத் தளத் தசைகள் மற்றும் தசைநார்கள் கருப்பையைத் தாங்க முடியாத அளவுக்கு பலவீனமாகி, அது பெண்ணுறுப்புக்குள் கீழே நழுவும்போது கருப்பைச் சரிவு ஏற்படுகிறது.
மக்கள் பெரிதும் கவனம் செலுத்தாத இந்த உடல் உபாதையினால், பல்வேறு விதமான வலிகள் மற்றும் நோய்களுக்கு ஆளாகுவதாக கூறுகின்றார் மகப்பேறியல் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் கணேஷ் ராஜ் வையாபுரி.
பொதுவாகவே 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்நோய்க்கு ஆளாகும் வேளையில், ஒருவர் இந்நோய்க்கு ஆளாகி இருப்பதை பல அறிகுறிகளின் வழி கண்டறியலாம் என்கின்றார் டாக்டர் கணேஷ் ராஜ் வையாபுரி.
''மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பெரும்பாலானோருக்கு இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக சிகிச்சையகத்தில், தசை அல்லது கருப்பை நழுவியிருப்பதாகவும், இடுப்பு வலி, முதுகு வலி, பாதம் பாரமாக இருப்பது போன்ற உணர்வு இருப்பதாக கூறுவார்கள்,'' என்றார் அவர்.
மேலும், சிலருக்கு சிறுநீர் மற்றும் மலச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் குறித்தும் டாக்டர் கணேஷ் ராஜ் விளக்கினார்.
அதிக நேரம் அமர்வது, அதிகமான குழந்தைகளை பிரசவித்தது, எடை அதிகமான குழந்தையை ஈன்றெடுத்தது போன்ற காரணங்கள் இருக்கலாம்.
மேலும், ஆஸ்துமா நோயினால் அதிகம் இருமலுக்கு ஆளாகுபவர்கள், உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள், புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் அதிக இருமலால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாக சிறு வயதில் கடுமையான அல்லது அதிகச் சுமையானப் பொருட்களை தூக்கி வேலை செய்தவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படும்.
பொதுவாகவே, இப்பிரச்சனைக்கு உடற்பிடிப்பு போன்ற பாரம்பரிய சிகிச்சை முறையைப் பின்பற்றி குணப்படுத்தலாம் என்று கூறப்படுவது குறித்து விவரித்த டாக்டர் கணேஷ் ராஜ், இப்பிரச்சனைக்கு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவதே சிறந்தது என்று கூறினார்.
இந்நோய் முதலாம் மற்றும் இரண்டாம் நிலையில் இருந்தால், வளையம் போன்ற ஒரு பொருளை வைத்து, கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை உள்ளேயே வைக்கும் சிகிச்சை முறை பயன்படுத்தப்படும்.
மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் இருந்தால், அறுவை சிகிச்சையின் மூலம், கருப்பையை அகற்றி, சிறுநீர்ப்பையையும் மலக்குடலையும் அதன் சரியான இடத்தில் பொருத்தும் முறை பின்பற்றப்படுகின்றது.
''முதலாம் மற்றும் இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு முதலாவது உடற்பயிற்சியின் மூலம் குணப்படுத்த முடியும். உடற்பயிற்சியின் மூலம் அந்த பாகங்கள் உறுதியாக இருக்கும். இரண்டாவது ஒருவித விளையம் பொருத்தப்படும்,'', என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அந்த வளையம் சுத்தம் செய்து மீண்டும் பொருத்தப்படும்.
மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை, விரைவில் குணமாகி விடுவதோடு, ஓரிரு நாட்களில் வழக்கம்போல நடக்க முடியும் என்றும் டாக்டர் கணேஷ் ராஜ் தெளிவுப்படுத்தினார்.
எனினும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஐந்து கிலோகிராமிற்கு அதிகமான பாரத்தை சுமக்கக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)