கோலாலம்பூர், 07 ஜூலை (பெர்னாமா) -- அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களிலிருந்து மருந்து பெறும் செயல்முறையை இலக்கவியல் மயமாக்கவும் நோயாளிகள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் நேர விரயத்தை குறைக்கும் நோக்கத்துடனும், 2020-ஆம் 'மை ஊபாட்' (MyUbat) எனும் செயலியை சுகாதார அமைச்சு உருவாக்கியது.
எனினும், அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் பயன்பாட்டு விகிதம், குறிப்பாக மூத்தக் குடிமக்கள் மற்றும் உட்புறப் பகுதி மக்கள் மத்தியில், எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக அமைச்சின் தரவு கூறுகின்றது.
2024-ஆம் ஆண்டு வரைக்குமான தரவின்படி 'மை ஊபாட்' செயலியில் 200,000-க்கும் அதிகமான நோயாளிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தகுதியுள்ள நோயாளிகளில் 15 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதற்கு, இலக்கவியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த திறன் குறைவே முதன்மை காரணமாக விளங்குவதாக பெர்னாமா செய்திகள் தொடர்புகொண்டபோது குடும்பநல மருத்துவர் டாக்டர் கோகிலவாணி சேகர் சந்திரன் குறிப்பிட்டார்.
''மை ஊபாட்' செயலியில் மருத்துவமனையே உங்கள் வீடுகளுக்கு மருந்துகளை அனுப்பும் சேவை உள்ளது. ஆனால், இன்னும் அதிகமானோர் இச்செயலியைப் பயன்படுத்தவில்லை. மருத்துவமனைகளுக்குச் சென்று, கார் நிறுத்துமிடத்தை தேடி அலைந்து, நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருப்பது போன்ற பலவற்றை நாம் தவிர்க்கலாம். இதனால், நோய்ப் பரவும் சாத்தியமும் அதிகம் உள்ளது,'' என்றார் அவர்.
இதனிடையே, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களில் 22.7 விழுக்காட்டினர் திறன்பேசியை பயன்படுத்தியதே இல்லை என்று 2023-ஆம் ஆண்டு மலேசிய புள்ளிவிவரத் துறை, டி.ஓ.எஸ்.எம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
எனவே, குடும்ப உறுப்பினர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்களின் உதவியின் மூலமும் அதனை விரிவுப்படுத்தலாம் என்றும் டாக்டர் கோகிலவாணி வலியுறுத்தினார்.
''நம் பெற்றோர் மற்றும் வீட்டின் பெரியவர்களுக்கு இந்தச் செயலியைப் பயன்படுத்த தெரியாமல் இருக்கலாம். எனவே, அவ்வீட்டின் இளைஞர்கள் அதனைப் பயன்படுத்தி மருந்துகள் பெறும் செயல்முறையை எளிதாக்கிக் கொள்ள உதவ வேண்டும்,'' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, இந்தச் செயலி குறித்த விழிப்புணர்வின்மையும் இதன் குறைவான பயன்பாட்டிற்கு ஒரு காரணமாகும் வேளையில், மொழித் தடையும் காரணமாவதால் நேரடியாக முகப்பிற்குச் சென்று மருந்துகளைப் பெறுவதையே பலர் விரும்புகின்றனர்.
'மை ஊபாட்' செயலி குறித்த நேரடி வழிகாட்டுதலை வழங்குதல், பயன்பாட்டு செயல்முறையை எளிதாக்குதல், பன்மொழி தேர்வை வழங்குதல் மற்றும் திறன்பேசியைப் பயன்படுத்தாத நோயாளிகளுக்கு எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்புதல் போன்ற முன்னெடுப்பு நடவடிக்கைகளின் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]