மலாக்கா, 06 ஜுலை (பெர்னாமா) -- மலேசியாவில் கொண்டாடப்படவிருக்கும் 2025-ஆம் ஆண்டு உலக சுற்றுலா தினம், WTD சரியான நேரத்தில் மட்டும் நடத்தப்படவில்லை.
மாறாக, தொலைநோக்குப் பார்வையுடனும் நாட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்த உலகளாவிய தளமாகவும் உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம், 2025 WTD மற்றும் 2025-ஆம் ஆண்டு உலக சுற்றுலா மாநாடு, WTC ஆகியவை மலாக்காவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சுற்றுப் பயணிகளை வரவேற்கவும் அவர்களை வழிநடத்தவும் மலேசியா தயாராக உள்ளது என்பதற்கான சான்றாக மலாக்காவில் நடைபெறும் WTD கொண்டாட்டம் அமையும் என்று தாம் நம்புவதாக அஹ்மாட் சாஹிட் கூறினார்.
அதோடு, மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள சுற்றுலாவின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் மலேசியா தயாராக உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலாக்கா, பண்டார் ஹிலிரில் நடைபெற்ற 2025 WTD மற்றும் 2025 WTC-இன் முன்னோட்ட தொடக்க விழா உரையில் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு குறிப்பிட்டார்.
உலக பாரம்பரிய நகரமாக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, யுனெஸ்கோ-வால் மலாக்கா அறிவிக்கப்பட்டதன் 17-வது ஆண்டு விழாவும் அனுசரிக்கப்பட்டது.
அஹ்மாட் சாஹிட்டின் உரையை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் வாசித்தார்.
''அண்மையில், நான் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது, வர்த்தகத் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் விமான நிறுவன கூட்டாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினேன். 2026-ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகையளிப்பதை நோக்கிய உத்வேகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன். இங்கிலாந்திலிருந்து வருகையளிப்பவர்களின் எண்ணிக்கையை 390,000-இல் இருந்து 500,000 பேராக உயர்த்துவதற்கான ஓர் இயக்கத்தை நாங்கள் இணைந்து தொடங்கினோம்,'' என்றார் அவர்.
கடந்தாண்டு, இங்கிலாந்திலிருந்து வருகையளித்த சுற்றுப் பயணிகளின் வழி 250 கோடி ரிங்கிட் வருமானம் பெறப்பட்ட நிலையில், சரியான உந்துதலுடன் இது 330 கோடி ரிங்கிட்டிற்கும் மேலாக பதிவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]