கோலாலம்பூர், 03 ஜூலை (பெர்னாமா) -- சிறு வயதிலேயே ஏற்படும் பார்வைக் குறைபாட்டு பிரச்சனையைக் களைவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலாம் ஆண்டில் பதிவு செய்வதற்கு முன்னதாகவே சிறார்களிடையே கண் பரிசோதனை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
கடந்தாண்டு கோலாலம்பூரைச் சுற்றியுள்ள ஐந்து ஆரம்பப் பள்ளிகளைச் சேர்ந்த 2,008 முதலாம் நிலை மாணவர்களை உள்ளடக்கிய கண் பரிசோதனையில், சுமார் ஐந்து விழுக்காட்டினருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா கூறினார்.
"அந்த எண்ணிக்கையில், 55 விழுக்காட்டு மாணவர்களுக்கு கண் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளிவிவரங்களின் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது. அதில் 88 விழுக்காட்டினர் குறுகிய பார்வை கொண்டவர்கள். நான்கு விழுக்காட்டினர் நிறக்குருடு மற்றும் எஞ்சிய எட்டு விழுக்காட்டினர் மாறுகண் பிரச்சனை கொண்டவர்கள்", என்றார் அவர்.
மாணவர்களின் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மொழி வளர்ச்சியில், பார்வைக் குறைபாடு தாமதத்தை ஏற்படுத்துவதுடன், இளம் வயது வரை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
இதனிடையே, முதலாம் ஆண்டிற்கான மாணவர்களின் பதிவின் போது கண் பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்குவதற்கான தனது திட்டத்தைக் கல்வி அமைச்சு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக, டாக்டர் சலிஹா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)