ஜெனிவா, 2 ஜூலை (பெர்னாமா) -- ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில், கோடை காலத்தின் ஆரம்ப வெப்பநிலை கவலைக்குரிய ஒன்றாகி உள்ளதாக ஐக்கிய நாட்டு வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெய்னின் பல நகரங்களில் வெப்பநிலை 46 பாகை செல்சியஸ் அளவில் பதிவாகி இருக்கும் வேளையில், பொதுமக்கள் வெளியில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, பார்சிலோனாவில் சாலை துப்புரவுப் பணியாளர் ஒருவர் தமது பணிநேரம் முடிந்தப் பிறகு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தின் விளைவாக தற்போது உலகெங்கிலும் கடுமையான வெப்ப அலை தாக்கி வருவாதல், மக்கள் வெப்பப் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட கூடும் என்று உலக வானிலை அமைப்பான WMO வலியுறுத்தியது.
இதனிடையே, நேற்று மத்திய பாரிசில் வெப்பநிலை 42 செல்சியஸ் பாகை வரை பதிவான நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் பெரும்லான பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கடுமையான வெப்ப அபாயங்கள் இருப்பதால் சில புறநகர் பகுதிகளில் பள்ளிகள் மூடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாரிசில் வெப்ப அலையைத் தொடர்ந்து, ஐஃபில் கோபுரத்தின் மிக உயர்ந்த மட்டத்தை அதன் நிர்வாகம் மூடியது.
இதனால், அதன் உச்சியைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மற்றொரு நிலவரத்தில், ஜெர்மனியின் சில பகுதிகளில் 40 செல்சியஸ் பாகை வரை வெப்பநிலையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முதியவர்கள் மற்றும் வீடுகள் இல்லாதவர்கள் உட்பட பாதிக்கக்கூடிய தரப்பினருக்கும் வெப்ப ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)