பட்டர்வெர்த், 02 ஜூலை (பெர்னாமா) -- அண்மையில் நடத்தப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் பினாங்கு சுங்கத்துறை இரு ஆடவர்களைக் கைது செய்ததோடு, 26 லட்சத்து 70,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்தது.
முதல் சம்பவத்தில், அமலாக்கப் பிரிவின் நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் கடந்த மே 6-ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு வீடமைப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியைச் சோதனை செய்ததாக பினாங்கு சுங்கத்துறை இயக்குநர் ரொஹைசாட் அலி கூறினார்.
லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் 20 மற்றும் 30 வயதுடைய லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளருமான இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ரொஹைசாட் அலி கூறினார்.
சம்பந்தப்பட்ட லாரியை சோதனை செய்ததில் சட்ட விரோதமானது என்று சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படும் இந்த சிகரெட் கடத்தல் கும்பலைக் கண்டறிய மேல் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ரொஹைசாட் தெரிவித்தார்.
இன்று பினாங்கில் உள்ள அரச மலேசிய சுங்கத் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இரண்டாவது சம்பவத்தில், கடந்த மே 9-ஆம் தேதி, பட்டர்வெர்த் வீடமைப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு லட்சத்து 36,737 ரிங்கிட் 20 சென் மதிப்புள்ள பல்வேறு வகையிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]