சிரம்பான், 02 ஜூலை (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், சிரம்பானில் தாமான் புக்கி க்ரிஸ்டலில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை மணி 4.53 அளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.
பூட்டியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது குறித்து பொதுமக்களிடமிருந்து தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முஹமாட் ஹட்டா செ டின் தெரிவித்துள்ளார்.
கிடைத்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, இரு அறைகளில் அழுகிய நிலையில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணையின்படி, 61 வயதுடைய ஆண், அவருடைய 59 வயது மனைவி மற்றும் அவர்களின் 30 வயது மகன் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களது மகனின் வலது கையில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் பெற்றோரின் உடல்களில் சந்தேகத்திற்கிடமாக எந்தவொரு அறிகுறிகளும் இல்லை என்றும் தடயவியல் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக முஹமாட் ஹட்டா கூறினார்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரத்த கரைகளுடன் நான்கு கத்திகளும் பல்வேறு வகையிலான மருந்துகளும் வீட்டின் வரவேற்பறையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)