ரோம், 02 ஜூலை (பெர்னாமா) -- மக்களுக்குப் பயனளிக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மடானி அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்கத் தயாராக உள்ளது.
உதவித் தொகை அல்லது கட்டண முறையை உட்படுத்திய கொள்கைகளைச் செயல்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், அது மக்களின் நலனுக்காகச் செய்யப்பட்ட வேண்டும் என்று, இத்தாலி, ரோம்மிற்கு மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வெளிநாட்டினர் அனுபவித்து வந்த உதவித் தொகைகள் நிறுத்தப்படும் என்று இதற்கு முன்னர் இருந்த, அரசாங்கங்களும் பிரதமர்களும் கூறியிருந்தாலும் அதற்கான உரிய நடவடிக்கைகளை எவரும் முன்னெடுக்கவில்லை என்று..
இத்தாயில் புலம்பெயர்ந்த மலேசியர்களுடனான விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைக் கூறினார்.
மக்களின் நலனுக்காக, அதிகமான பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிர்மாணிப்பதற்காக, உதவித் தொகைகளையும் வரிகளையும் சரியான முறையில் செயல்படுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மடானி அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் விவரித்தார்.
மலேசியா தொடர்ந்து போட்டித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக மடானி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்தும் அன்வார் அந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
இத்தாலிக்கு புலம்பெயர்ந்த மலேசியர்கள் நாட்டை அனைத்துலக அரங்கிற்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)