பேங்காக், 01 ஜூலை (பெர்னாமா) -- தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷின்வத்ரா தனது அமைச்சரவையை மறுசீரமைத்துள்ளார்.
எல்லைப் பிரச்சனையைக் கையாள்வது தொடர்பில் தமது அரசாங்கத்தை விளிம்பிற்குக் கொண்டு வந்த அரசியல் நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவைக்குத் தாய்லாந்து மாமன்னர், மஹா வஜிரலோங்கோர்ன் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமராக நீடிக்கும் பேடோங்டார்ன், கலாச்சார அமைச்சராகவும் பொறுப்பேற்பார்.
சில புதிய முகங்களுடன் பேடோங்டார்ன் அறிவித்திருக்கும் அமைச்சரவையில் முன்னாள் அரசாங்க அதிகாரியான ஜாதுபோர்ன் புருஸ்பத் வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த பியூ தாய் கட்சியின் அரசியல்வாதி பும்தம் வெச்சாயாச்சாய், தற்காப்பு அமைச்சர் பதவியில் இருந்து உள்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
மற்றொரு நிலவரத்தில், தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக்ஷின் ஷின்வத்ரா மீதான மன்னராட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு, இன்று, பேங்காக் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியது.
தக்ஷினின் வழக்கறிஞர் வின்யாட் சார்ட்மோன்ட்ரி மற்றும் அவரது மைத்துனர் முன்னாள் பிரதமர் சோம்சாய் வோங்சாவத் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
இருப்பினும், தக்ஷின் நீதிமன்றத்திற்குள் நுழையவில்லை என்றாலும், அவரது கார், வாகன நிறுத்துமிடத்தில் காணப்பட்டது.
2015-ஆம் ஆண்டு, சுயமாக நாட்டை விட்டு வெளியேறிய தக்ஷின் அளித்த ஊடக நேர்காணலைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)