பெட்டாலிங் ஜெயா, 03 ஜூலை (பெர்னாமா) -- RMK13 எனப்படும் 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்திற்கு ஒரு நிலையான மற்றும் சமமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மலேசிய இல்திசாம் அறவாரியத்தின் கீழ் செயல்படும் இந்திய விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முதன்மையான 5 துறைகளில், அந்த 11 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு, அவை கடந்த மாதம் ஜூன் 23-ஆம் தேதி பொருளாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
கல்வி, பொருளாதாரம், தொழில்துறை, பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு, நிர்வாகம் ஆகிய துறைகள் தொடர்பான பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருப்பதாக, சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
மலேசிய இல்திசாம் அறவாரியத்தின் மூலம் இளைஞர்கள், பெண்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் என சுமார் 200 பேரை உட்படுத்தி, கடந்த நான்கு மாதங்களாக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறைகளின் மூலம் அப்பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டதாக, அவர் கூறினார்.
''முதல் பட்டறையில் இளைஞர்கள், இரண்டாவது பெண்கள், மூன்றாவது அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், கண்காய்வாளர்கள், வங்கியில் பணிப்புரிபவர்கள் போன்றவர்களுடன் இணைந்து கலந்துரையாடினோம். நான்காவது, இந்த திட்டத்தில் நமக்கு ஆதரவு இருக்கின்றதா, இதனை செய்ய முடியுமா என்பது போன்ற திட்டங்களை கடைசி கூட்டத்தில் தான் நாங்கள் முடிவுச் செய்தோம். அதில்,சரிபார்த்து சமநிலைப்படுத்த வேண்டியது இருந்தது. மேலும், ஒரு செயல்முறை இருக்கின்றது'', என்றார் அவர்.
மேலும், மக்கள் தொகையில் 6.1 விழுக்காடாக இருக்கும் இந்திய சமுதாயம், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சிறந்த நிலையை அடைய வேண்டுமென்றால், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உருமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அறவாரியத்தின் தன்னார்வலருமான சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
''முன்பு, நமக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாது. ஆனால், தற்போது நாம் அரசாங்கத்திடம் என்ன பரிந்துரை செய்கிறோம் என்றால் ஒரு திட்டவரைவை உருவாக்க வேண்டும். அதில், இந்தியர்களுக்கு எம்மாதிரியான திட்டங்கள் உள்ளது, என்ன செய்ய முடியும் போன்றவை அதில் இருக்க வேண்டும். அனைவரின் பார்வைப்பட இருக்க வேண்டும். எனவே, அது மிகவும் வெளிப்படையாக இருக்கும்'', என்று கூறினார்.
இதனிடையே, கல்வியைப் பாதியில் கைவிடும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தீர்வுக் காண்பது, குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்வது, பாலர் பள்ளிகள் இல்லாத தமிழ்ப்பள்ளிகளில் அதனை அமைத்துக் கொடுப்பது போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருப்பதாக, அவர் கூறினார்.
''நம்முடைய பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படிக்கின்றனர், அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. பிள்ளைகள் பள்ளிக்கு முறையாக வராததற்கு ஆசிரியர்களிடம் காரணம் கேட்டால், பள்ளி பேருந்துகள் இல்லை அந்த பகுதியில் மற்றும் பிள்ளைகள் பசியோடு இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குறிப்பாக நகர்ப்புற கோலாலம்பூரில் உணவு போதுமானதாக இல்லை, ஊட்டச்சத்து குறைவாக உள்ளது. இந்த பிரச்சனையைத் தான் இந்திய, சீன மற்றும் மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்'', என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)