கோலா திரெங்கானு, 25 ஜூன் (பெர்னாமா) - இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை திரெங்கானு, கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம் ஈ.சி.ஆர்.எல் தளத்தில் 3 லட்சம் மதிப்புள்ள மின் கம்பிகள் களவாடப்பட்டது உட்பட 22 கொள்ளை சம்பவங்கள் குறித்த புகார்களை போலீசார் பெற்றுள்ளனர்.
அந்த எண்ணிக்கையின் விளைவாக பெசூட்டில் ஐந்து, மாராங்கில் நான்கு, செத்தியூவில் இரண்டு, கெமாமான் மற்றும் டுங்குனில் முறையே ஒன்று என மொத்தம் 13 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட 13-யிலிருந்து ஐந்து வழக்குகள், குற்றவியல் சட்டம் செக்ஷன் 414 மற்றும் செக்ஷன் 379/511-இன் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுள்ளதாக, திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் கைரி கைருடின் கூறினார்.
குற்றஞ்சாட்டப்படுவதற்கும் கைது செய்வதற்கும் முறையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், மேலும் ஐந்து வழக்குகள் மேல் நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
எஞ்சிய மூன்று இன்னும் விசாரணையில் இருப்பதாக, இன்று பெர்னாமா தொடர்புக் கொண்டபோது கைரி உறுதிபடுத்தினார்.
கடந்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை சுமார் 20 லட்சம் இழப்பீடுகள் கொண்ட 35 புகார்களைப் போலீஸ் பெற்ற நிலையில், அதே காலக்கட்டத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)