கோலாலம்பூர், 28 மே (பெர்னாமா) -- ஹலால் மேம்பாட்டுக் கழகம், HDC-யையும் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகம், MATRADE-டையும் இணைக்கும் பரிந்துரையை, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
நாட்டின் ஹலால் துறையை மேம்படுத்துவது உட்பட சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதால், இவ்விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளதாக அதன் அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
''ஹலால் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, முடிந்தால், ஹலால் தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்குவதில் ஹலால் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக நாங்கள் MATRADE-ஐ நகலாக்க விரும்பவில்லை. MIDA முதலீடுகளைப் பொறுத்தவரை, ஹலால் முதலீடுகளில் MIDA கவனம் செலுத்துவதையும் நாங்கள் நகலாக்க விரும்பவில்லை. எனவே, HDC ஹலால் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டின் ஆசியான்-GCC பொருளாதார கலந்துரையாடலில் நெறியாளராக பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெங்கு சஃப்ருல் அவ்வாறு கூறினார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், MIDA, ஹலால் தொழில்துறை சம்பந்தப்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502