Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நிர்வாகத் திறனை வலுப்படுத்த தொழில்முனைவோர் பயிற்சிகளில் பங்கேற்க ஊக்குவிப்பு

17/05/2025 06:24 PM

கோலாலம்பூர், 17 மே (பெர்னாமா) -- நிர்வாகத் திறனை வலுப்படுத்தி கொள்ள உள்நாட்டு தொழில்முனைவோர் தங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பயிற்சிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தங்களின் வர்த்தகம் தொடர்ந்து நீடித்திருக்கவும் போட்டியாற்றல் தன்மையுடன் இருப்பதையும் உறுதிசெய்ய இப்பரிந்துரையை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முன்வைத்தார்.

தற்போது பெரும்பாலான வர்த்தகர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரிந்திருந்தாலும், மின்சாரம், ஆள்பளம் மற்றும் உபகரணகங்களை சிக்கனப்படுத்துவது போன்ற வர்த்தகம் சார்ந்த அம்சங்களில் அவர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகள் குறித்த தெளிவைப் பெற, தெக்கூன் ஏற்பாட்டில் இ.ஐ.பி எனப்படும் இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தெக்குன் தொழில்முனைவோர் அடிப்படை கருத்தரங்கு அவர்களுக்கு பெரிதும் உதவும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

''ஒவ்வொரு அம்சத்திலும் நாம் சிக்கனப்படுத்தும்போது நமது வர்த்தகத்தின் லாபமும் அதிகரிக்கும். எனவே, கிடைக்கும் லாபத்தை எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு அதை நிர்வகிப்பது, அதைக் கொண்டு எவ்வாறு உங்கள் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது போன்ற விவரங்கள் இப்பயிற்சியில் தெரிந்து கொள்ளலாம்.'' என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளின் பட்டியலைக் கண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் நாடு முழுவதிலும் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட இக்கருத்தரங்கில், இம்முறை சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தில் மட்டும் 120 பேர் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது என்று ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே, தெக்குன் மூலம் பயனடைந்தவர்கள் சிலர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டது குறித்து தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

''என்னதான் வர்த்தகத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், இதன் தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தாலும், இங்கு புதிதாக எதையும் கற்றுக் கொள்ளலாம் அல்லது புதிய தொடர்பு கிடைக்கலாம் அல்லது அனுபவம் கிடைக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவுமே தவிர எவ்வகையும் பாதிப்பை ஏற்படுத்தாது,'' என்று  கருத்தரங்கில் பங்கேற்ற திருகோடீஸ்வரன் என்பவர் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுஅமைச்சின் கீழ் உள்ள திட்டங்களும், தெக்குன் மூலம் வழங்கப்படும் நிதியும் மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவம் அதேவேளையில், இவ்வாண்டில் மட்டும் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை தெக்குன் மூலம், 11,698 தொழில்முனைவோருக்கு 25 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)