கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- சில பி.கே.ஆர் கிளைகளின் தேர்தல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளின் நிலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
தற்போது, கட்சித் தேர்தல் செயற்குழு, ஜே.பி.பி-இன் அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாஃபா தெரிவித்திருக்கிறார்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக, தமது கட்சி முதலில் அனைத்து ஆட்சேபனைகளையும் புகார்களையும் ஆராயும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சருமான டாக்டர் சலிஹா முஸ்தாஃபா கூறினார்.
கிளை அளவிலான தேர்தல் தொடர்பாக எந்தவொரு பி.கே.ஆர் தலைவரும் சமர்ப்பிக்கும் ஆட்சேபனைகளையும் மேல்முறையீடுகளையும் புகார் செயற்குழு மற்றும் மேல்முறையீடு செயற்குழு மதிப்பாய்வு செய்தப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
டத்தோ அஹ்மாட் காசிம் தலைமையிலான புகார் செயற்குழு, ஆட்சேபனைகளையும் புகார்களையும் மதிப்பாய்வு செய்வதோடு முஹமட் குசான் அபு பக்கார் தலைமையிலான மேல்முறையீடு செயற்குழுவும் சமர்ப்பிக்கப்படும் மேல்முறையீடுகளைப் பரிசீலிக்கும்.
ஜோகூர் பாரு கிளைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் போன்ற பல பெயர்கள் ஜே.பி.பி-க்கு தங்களின் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]