பொது

வீட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியே பறிபோனது - சிவசுதனின் தந்தை கவலை

24/04/2024 08:21 PM

சித்தியவான், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- அரச மலேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு நேற்று வான் சாகசங்களைப் புரியும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் பலியான பத்து வீரர்களில் விமானப்படை அதிகாரியான 31 வயதுடைய லெஃப்டர்னன் சிவசுதன் தஞ்சப்பனும் ஒருவராவார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மணக்கோலத்தில் கண்ட மகனை மூன்றே மாதத்தில் பறிகொடுப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று அவரின் தந்தையும் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் பணி ஓய்வு பெற்ற ஆசிரியருமான 61 வயதுடைய எம்.தஞ்சப்பன் மனமுடைந்து கூறினார்.

"என் மகன் மிகவும் நல்லவன். எல்லோருடனும் அன்போடு பழகுவான். வீட்டின் எல்லாருக்கும் அவன் தான் செல்லப் பிள்ளை. நான் வாழும் காலத்தில் மகனைப் பறிகொடுப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த சோகத்திலிருந்து என் ஒட்டுமொத்த குடும்பமும் எப்படி மீளப் போகிறது என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்," என்று வேதனையோடு தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அழைப்பு கிடைத்ததும் மகனுக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்று உளமாற வேண்டிய போது, அவரின் மரணம் குறித்த செய்தி பேரடியாக விழுந்ததாக தஞ்சப்பன் கண்ணீர் மல்கக் கூறினார்.

தமது வீட்டின் மொத்த மகிழ்ச்சியும் பறிபோய்விட்டதாக அவர் கூறினார்.

வீட்டிற்கு ஒரே ஆண் பிள்ளையான சிவசுதனுக்கு ஓர் அக்காவும் ஒரு தங்கையும் உள்ளனர்.

அவரின் தாயார் ஏ.பரமேஸ்வரியும் சித்தியவானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆவார்.

இதனிடையே, மலேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான சிவசுதன், தமது தொடக்கப் பணியை சபாவில் மேற்கொண்ட பின்னர் இங்கு மாற்றலாகி வந்து பல் மருத்துவரான ஹர்ஷினி சந்திரசேகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

சிவசுதனின் நல்லுடல் பேராக், சித்தியவான், தாமான் செர்டாங் ஜெயாவில் உள்ள அவரின் பெற்றோர் வீட்டிற்கு இன்று மாலை 5.52 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

அவருக்கும் அஞ்சலி செலுத்த குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர்கள் கூடி இருந்ததைக் காண முடிந்தது.

சிவசுதனின் இறுதிச் சடங்கு நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 25ஆம் தேதி காலை காலை 9 மணி தொடங்கி காலை 11.30 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவரின் நல்லுடல் பேராக், மஞ்சோங் இந்து சபா இடுகாட்டில் தகனம் செய்யப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)