பொது

ஆலயங்களுக்கும் இந்து இயக்கங்களுக்கும் MAHIMA மானியம் வழங்கியது

26/11/2023 07:56 PM

கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியாவில் ஆலயங்களுக்காக அரசாங்கம் கொடுத்திருந்த நிதியை, மலேசிய இந்து ஆலயம் - இந்து அமைப்புகளின் பேரவையான MAHIMA , முதற்கட்டமாக 125 ஆலயங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரிங்கிட் மானியமாக இன்று வழங்கி இருக்கின்றது.

இந்நிதி ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் இதர நலத்திட்டங்களுக்கும் பயனாக இருக்கும் என்று மஹிமா தலைவர் டான் ஶ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

கடந்தாண்டு ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் மஹிமா இணைந்து அரசாங்கத்திடம் நாட்டிலுள்ள ஆலயங்களுக்காக நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

அந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு மத்தியில் சுமார் 625,000 ரிங்கிட் கிடைத்தாகவும், அது முறையாக சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு பகிர்ந்தளிப்பட்டதாகவும் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவருமான டான் ஶ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

''இது அரசியல் விவகாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக MAHIMA-வும் ம.இ.கா-வுடன் இணைந்து செயல்பட்டது. இன்னும் நிதி கிடைக்காத ஆலயங்களுக்கும் அதனைப் பெற்றுத் தர MAHIMA முயற்சிக்கும்,'' என்றார் அவர்.

சிலாங்கூர், பத்துமலை திருத்தளத்தில் ஆலயங்களுக்கும் இந்து இயக்கங்களுக்கும் மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

இதில் 93 ஆலயங்களைச் சேர்ந்த ஆலய நிர்வாகத்தினர் காசோலையைப் பெற்றுக் கொண்ட நிலையில், எஞ்சிய ஆலயங்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

MAHIMA-வில் பதிவுப் பெறாத ஆலயங்களை உடனடியாக பதிவு செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட டான் ஶ்ரீ நடராஜா, முறையான விபரங்களைக் கொண்டிருக்கும் ஆலயங்களுக்கு நிதியுதவி எளிதில் கிடைக்கும் என்றும் கூறினார்.

இதனிடையே, இந்த நிதியை ஆலயத்தில் உள்ள சிறு திருப்பணிகள், சமய நிகழ்ச்சிகள், வழிபாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று காசோலையைப் பெற்றுக் கொண்ட ஆலயங்களின் நிர்வாகத்தினர் சிலர் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தனர்.

''இந்த நிதியை நாங்கள் சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்வோம். பெரிய ஆலயங்களுக்கு இது சிறிய நிதியாக இருந்தாலும, ஒவ்வோர் ஆண்டும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்,'' என்றார் அவர்.

இது போன்ற உதவிகள், கட்டம் கட்டமாக நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)