GE15 NEWS  
பொது

சாலை விபத்தில் இந்திய இளைஞர் உட்பட மூவர் உயிரிழப்பு

19/03/2023 07:54 PM

கோலாலம்பூர்,  19 மார்ச் (பெர்னாமா) -- இன்று அதிகாலை கோலாலம்பூரில்,  செப்பூத்தேவில் உள்ள ஜாலான் சையிட் புத்ராவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் மூவர் கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் நிறுதி வைக்கப்பட்டிருந்த பாரம் தூக்கியை கார் ஒன்று மோதியதை அடுத்த இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

அதிகாலை 3.46 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக  தீயணைப்பு மீட்பு படையின் மூத்த தளபதி கே.சேகர் தெரிவித்தார். இதனையடுத்து ஹங் துவா தீயணைப்பு நிலையத்தில் 10 உறுப்பினர்கள் உடனடியாக அங்கு விரைந்ததாக அவர் கூறினார்.

இந்த சாலை விபத்தில், பாரம் தூக்கி அருகே பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பாதுகாப்பு தொழிலாளர்களையும் கார் மோதியதால் பலத்த காயம் அடைந்தனர்.

அதேவேளையில் சாலை விபத்தில் காரின் முன்புறம் நொறுங்கியதால், அதன் ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதாக சேகர் தெரிவித்தார்.

இதில் அம்மூவரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்ததாக சேகர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அந்த மூன்று சடலங்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

-- பெர்னமா