பொது

சீன மொழி செய்தியில் தவறான சித்தரிப்பு; முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு

13/05/2021 05:41 PM

கோலாலம்பூர், 13 மே (பெர்னாமா)-- மலேசிய ஒலி ஒளிபரப்புத் துறை ஆர்.டி.எம்-இன் சீன மொழி செய்தியில் பாலஸ்தீன இஸ்லாமிய இயக்கமான ஹாமாசை போராளி என்று சித்தரித்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அத்துறையின் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது. 

இது குறித்த விளக்கத்தைப் பெற சீன மொழி தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அழைக்கப்பட்டிருப்பதோடு அதில் ஈடுபட்ட அதிகாரிக்கும் காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டிருப்பதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைஃப்புடின் அப்துல்லா தெரிவித்தார்.   

இதுபோன்ற தவறுகள் வரும் காலங்களில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய ஆர்.டி,எம் செய்தியின் நடப்பு விவகாரப் பிரிவு செய்தித் துறையின் பணிகளுக்கு குறிப்பாக தொலைக்காட்சி செய்தி தயாரிப்பு மற்றும் திருத்தம் செய்யும் செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யை மறுஆய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் சைஃப்புடின் குறிப்பிட்டார்.  

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் தொடர்பில் ஆர்.டி.எம்  தொலைக்காட்சி 2-இல் நேற்று சீன மொழி செய்தியில் அந்த சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவ்விவகாரம் தொடர்பில் அன்றைக்கு மதியம் ஒரு மணிக்கு ஒளியேறிய BERITA TENGAH HARI மற்றும் ஏழு மணிக்கு ஒளியேறிய சீன மொழி செய்தியிலும் பகிரங்க மன்னிப்பு, கேட்கப்பட்டதோடு அச்செய்தியின் திருத்தமும் ஒளிபரப்பப்பட்டது.

இச்சூழலை ஆர்.டி.எம்  நன்கு அறிந்திருப்பதாகவும் பாலஸ்தீனத்தின் விடுதலை மற்றும் அரசுரிமை மீதான போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் மலேசியா கொண்டிருப்பதாகவும்  சைஃப்புடின் விவரித்தார்.  

-- பெர்னாமா