பொது

குற்றச்சாட்டை ரத்து செய்யுமாறு தேசிய போலீஸ் தலைவர் பரிந்துரை

14/01/2021 06:31 PM

கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- தமது முன்னாள் கணவர் முஹம்மட் ரிடுவான் அப்துல்லா கைது செய்யவும் 13 வயதுடைய மகளைக் கண்டுபிடித்துக் கொடுக்கவும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம். தவறியதாக பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திரா காந்தி பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டை ரத்து செய்யுமாறு தேசிய போலீஸ் தலைவர் மற்றும் இதர மூன்று தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று இணையம் வழியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கூட்டரசு மூத்த வழக்கறிஞர் சஃபியா ஒமார் அனைத்துப் பிரதிவாதி சார்பாகவும் இக்குற்றச்சாட்டை ரத்துச் செய்யுமாறு உயர்நீதிமன்ற துணைப் பதிவாளர் இடாமஸ்லிசா மாரோஃப்-விடம் கேட்டுக் கொண்டதாக இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இவ்விண்ணப்பத்தை இந்திரா காந்தி தரப்பிடம் சமர்ப்பித்துவிட்டதாகக் கூட்டரசு மூத்த வழக்கறிஞர் தரப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

தமது முன்னாள் கணவர் மீதான விசாரணை குறித்த 48 கேள்விகளுக்குத் தேசிய போலீஸ் தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று இந்திரா காந்தியின் விண்ணப்பமும் முதல் பிரதிவாதியான அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.

இவ்வழக்கின் மறு விசாரணை, இடாமஸ்லிசா முன்னிலையில், இ-ரிவியூ மூலம் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா