சிறப்புச் செய்தி

மஇகா தேசியத் தலைவரின் பொங்கல் வாழ்த்து

13/01/2021 08:52 PM

கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பெருமைக்குரிய நன்னாளாக பொங்கல் மலர்கின்றது.

இந்த ஆண்டு மலர்கின்ற பொங்கல் நமது மலேசிய இந்தியர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, வாழ்க்கையில் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், நாம் இம்முறை நமது பாரம்பரியத் விழாக்களான பொங்கல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் தைப்பூசத்தையும் வழக்கம்போல் கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மற்றொரு நடவடிக்கையாக அவசரகாலமும் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி வரை அரசாங்கத்தால் அமலாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையை நமது இந்திய சமூகம், பொறுமையோடும், நன்கு சிந்தித்தும், திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

ஆகவே, பாரம்பரிய வழக்கப்படி, நமது பெருநாட்களையும், திருவிழாக்களையும் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடும் நிலைமை மீண்டும் வரும் என்ற நம்பிக்கைகளோடு, பொங்கல் திருநாளை இல்லங்களிலேயே கொண்டாடி மகிழ்வோம் என்று அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா