Tuesday, 24 Nov 2020
22/11/2020 07:53 PM

கூலாய், 22 நவம்பர் (பெர்னாமா) -- ஜோகூர், செடெனாக் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் பீச் கிராஃப்ட் போனான்ஸா (BEECH CRAFT BONANZA) ரகத்திலான சிறு விமானம் ஒன்று இன்று காலை அவசரமாக தரையிறங்கியது.

காலை 11.05 மணியளவில் இரண்டு சிங்கப்பூர் விமானிகளால் இயக்கப்பட்ட அவ்விமானம் வழக்கமான பயணப் பதிவை நிறைவு செய்யும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் தோக் பெங் இயோவ் தெரிவித்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட அந்த விமானம், சிங்கப்பூர் செலெட்டார் விமான நிலையத்திலிருந்து மலாக்கா பத்து பெரெண்டாம் விமான நிலையத்திற்கு இரண்டாவது முறையாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தோக் பெங் இயோவ் உறுதிபடுத்தினார்.

இருந்தபோதிலும் ஜோகூர், சிம்பாங் ரெங்காம் பகுதியைக் கடந்தபோது ஐயாயிரம் அடி உயரத்தில் விமானத்தின் இயந்திரம் செயலிழந்தது.

இதனால் 12 ஆண்டுகள் விமானம் செலுத்துவதில் அனுபவமும், 480 மணி நேர விமானப் பதிவையும் கொண்டுள்ள அதன் விமானி தமது உதவியாளரின் துணையோடு விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார்.

''ஜோகூர், கூலாய் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 47.8 கிலோமீட்டரில், சிறிய ரகத்திலான தனியார் விமானம் ஒன்று இன்று காலை அவரசமாக தரையிறங்கியது. இதில் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படாத நிலையில் விமானத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. வெறும் விமானத்தின் இயந்திரத்தில் மட்டுமே பழுது ஏற்பட்டுள்ளது'', என்று அவர் குறிப்பிட்டார்.

அவ்விமானத்தின் விமானிகளான சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் யாங் குவாங் யிங் மற்றும் அவரின் உதவியாளர் சலீஹுல்லா அப்துல் மாஜிட் இருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நெஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அவ்விமானத்தின் 15 விநாடி காணொளியை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

-- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க