சிறப்புச் செய்தி

தாய்சேய் பராமரிப்பு தொழிலில் முன்னேறும் இளம் தம்பதியர்

19/11/2020 08:20 PM

கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) -- குழந்தைகளைக் குளிப்பாட்டுவதும் தலாட்டுவதும் நாட்டுப்புற கலைகளில் பாரம்பரியமான ஒன்றாகும்.

ஆனால், காலம் மாறுகின்ற நிலையில், அக்கலையானது மூத்த சந்ததிகளோடு நின்று விடுகின்றதா, என்ற கேள்விகளுக்கு மத்தியில், இன்றைய தலைமுறையைச் சார்ந்தவர்களில் சிலர் அதனை முறைப்படி கற்றுக்கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, கவலை நமக்கில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் ரீதியில், இக்கலையைக் கற்றுக் கொண்டு பல பெண்களுக்கு உதாரணமாகி இருக்கின்றார் ஆங்கில மொழி பட்டதாரியான ரூபாவதி குணசீலன்.

ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்த ரூபாவதி தாய்மை அடைந்தபோது, தமது குழந்தையை தனியே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கர்ப்பிணியான காலக்கட்டத்தில், அரசாங்கத்தின் தாய்சேய் பராமரிப்பு திட்டத்தில் பங்கேற்று பயிற்சி பெற்றிருப்பதாக பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அதன் பயனாக, தமது குழந்தையை தாமே பராமரிக்கத் தொடங்கிய ரூபாவதி, பின்னர் அக்கலையை கைத்தொழிலாக மாற்றிக்கொண்டு, சிலரின் ஊக்குவிப்பினால், வாழ்வின் ஆதாரமாக அதனை ஏற்று, பிரசவத்தில் மறுபிறப்பெடுக்கும் தாயையும் சேயையும் குளிப்பாட்டி தாய்மையுடன் பராமரிக்கும் தொழிலை முழுநேரமாக செய்து வருகின்றார். 

''ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாமல் தான் இந்த தொழிலைத் தொடங்கினேன். ஆனால், பொதுமக்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவும் உதவியும் என்னை பெரிதும் உற்சாகம் அடையச் செய்தது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட தாய்க்கும் சேயிக்கும் எனது சேவைகளை வழங்கியுள்ளேன்'', என்று ரூபாவதி தெரிவித்தார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி இந்த, இத்தொழிலை மேற்கொண்டு வரும் ரூபாவதி, தாய் சேய் பராமரிப்பு தொடர்பான தகவல்களை முழுமையாக கற்றுத் தேர்ந்ததுடன், தமது ருபிஷா அகடாமியின் கீழ், இதுவரை 40 பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு இதனைக் கற்றுக் கொடுத்து ஆரம்பித்து அவர்களும் இதன் மூலம் வருமானம் ஈட்டிக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

''குழந்தைகளைக் குளிப்பாட்ட  பெரியவர்களைத் தேடுவது, வயதான பாட்டிகளைத் தேடுவது எனப் பெரிய சவாலே நடக்கும். குழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. அது எப்படி எனத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வேலை சுலபமாகி விடும். அதனாலே அதனை முறைப்படி கற்றுக்கொண்டேன்'', என்று ரூபாவதி தெரிவித்தார். 

''குழந்தையைக் குளிக்க வைத்தல் என்பது குழந்தையின் உடலை சுத்தப்படுத்தும் முறை மட்டும் அல்ல, குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கும், உடல் உறுதிக்கும், உறுப்புகள் வலிமையடையவும் உதவக்கூடியது என்பதால் இதை தனிக்கலையாகவே செய்து வருகின்றேன்'', என அவர் கூறினார்.

இதனிடையே, ரூபாவதியின் தாய் சேய் பராமரிப்பு சேவைகளைப் பெற்று வரும் சிலர், தங்களின் அனுபவங்களை கூறும், அதேவேளையில், இளம் பெண்கள் இதுபோன்று தொழில் செய்வதையும் வரவேற்று இருக்கின்றனர்.

எந்த தொழில் செய்த போதிலும், அதில் நல்லதும் கெட்டதுமாக விமர்சனங்கள் வருகின்ற ரீதியில், சில குறைக்கூலகளை அன்று சகித்துக்கொண்டு போனதில், இன்று சாதனையாளர் பட்டியலில், தமது மனைவியின் பெயரும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி என்று கூறுகின்றார், ரூபாவதியின் கணவர் குணசீலன் விக்ரமன். 

''ஆரம்பத்தில் ரிஸ்க் எடுத்துதான் இந்த தொழிலை என் மனைவி தொடங்கினார். ஆனால் அன்று எடுத்த ஒரு முயற்சிக்கு இன்று அங்கீகாரம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது'', என்று குணசீலன் தெரிவித்தார். 

கொவிட்19 பெருந்தொற்று கால கட்டங்களில், பலர் வேலை இழக்கின்ற சூழ்நிலையில், இந்தக் கைத்தொழிலின் மூலம், தாம் மட்டுமில்லாது, தம்மை சார்ந்தவர்களும் முன்னேறுவதற்கு ரூபாவதி வழிகாட்டியாக இருக்கின்றார்.

--பெர்னாமா