சிறப்புச் செய்தி

பிறந்த மண்ணுக்கு புகழ் சேர்த்த டாக்டர் ஜெயந்தி நடராஜன்

20/10/2020 10:55 PM

கோலாலம்பூர், 20 அக்டோபர் (பெர்னாமா) -- ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்துலக விதை சோதனைக் கழகத்தின் புதிய குழுமத் தலைவராக மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ஜெயந்தி நடராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த சாதனை மலேசியாவிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கே பெருமையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடராஜன் சரோஜா தம்பதிகளின் மகளான டாக்டர் ஜெயந்தி ஜோகூர், தங்காவில் பிறந்து தமது ஆரம்ப கல்வியை ஜோகூர், தங்கா தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார்.

இவர், மலாயா பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் துறையில் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்று பின்னர், சிலாங்கூர் கெபோங் வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றினார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து டன்டி பல்கலைகழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்த டாக்டர் ஜெயந்தி, லண்டன் கியூ கார்டனில் 13 ஆண்டுகளாக ஆராய்ச்சித்துறை விஞ்ஞானியாகவும் பணியாற்றி உள்ளார்.

டாக்டர் ஜெயந்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக விதை பாதுகாப்பு அறிவியல் துறையில் அனுபவம் பெற்றதோடு, பல ஆண்டுகளாக பாதுகாப்பு அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது, ​​அவர் நியூசிலாந்து வணிக, புதுமை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் திட்டத் தலைவராகவும், மாஸி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராகவும் பதவி வகித்து வருகின்றார்.

அனைத்துலக இடமாற்றம் மற்றும் வழித்தோன்றல்கள் சங்கம், ஐ.எஸ்.டி.இவின் விதை சேமிப்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அங்கிகாரம் என்று டாக்டர் ஜெயந்தி கூறினார்.

--பெர்னாமா