சிறப்புச் செய்தி

பொழுது போக்காக தொடங்கிய கலை, தொழிலானது

14/10/2020 07:54 PM

சைபர்ஜெயா, 14 அக்டோபர் (பெர்னாமா) -- வண்ணங்களின் கூட்டு மட்டும் அல்ல ஓவியம். மனித எண்ணங்களின் பிம்பம். உணர்வுகளின் வெளிப்பாடு. 

எனவேதான், ஓவியத்தை, பேசாத கவிதை என்பார்கள். 

ஓர் ஓவியரின் கற்பனைத் திறனில் வெளிபடும் ஓவியத்திற்கு அர்த்தம் சொல்வது எளிதல்ல. அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும். 

பொழுதுபோக்காக தொடங்கிய கலை, பொருளீட்டும் தொழிலாக மாறியது காலத்தின் தீர்ப்பு என்கிறார், ஓவிய தொழிலில் சாதனை படைத்து வரும் ஓவியர் ஜார்ஜ் டேனியல். 

தன் 13-ஆவது வயதில் சாதாரண ஓவியராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜார்ஜ் டேனியல், அதையே தன் வாழ்வாதாரத்திற்கான தொழிலாக மாற்றி இன்று தமது 49-ஆவது வயதிலும் அதே உற்சாகத்தோடு நவீன ஓவியங்களை படைத்து வருகிறார். 

கலை, திறமையின் வெளிப்பாடு. எனவே, ஓவிய கலையில் ஆர்வமுள்ளவர்கள், அதனை ஒரு பொழுது போக்காக மட்டுமல்லாமல் வருமானம் ஈட்டித்தரும் ''தொழில் கலையாகவும்'' பார்க்கலாம். 

''பலர் உலகம் முழுவதிலும், பகுதி நேரமாகவும் பின்னர் முழு நேரமாகவும் ஈடுபட்டு, ஓவிய கலையில் தனி முத்திரை பதித்து வருவது பாராட்டுக்குறியது. அதேபோல், அதிகமான இந்திய இளைஞர்கள் ஓவியத்துறையில் ஈடுபட வேண்டும்'' என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். 

தமது ஓவிய படைப்புகள் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமல்லாமல், சாதாரண மக்களிடமும் சென்று சேரவேண்டும் என்பதற்காக, குறைந்தது நான்கு ரிங்கிட் முதல் 40 ஆயிரம் ரிங்கிட் வரை விற்கப்படுவதாகவும் ஜோர்ஜ் டேனியல் தெரிவித்தார். 

மலேசியாவின் தலைமை நீதிபதி டான் ஸ்ரீ டத்தோ ஶ்ரீ பங்லிமா ரிச்சர்ட் மலஞ்சம், மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனமான தலைவர் டத்தோ என். மாரிமுத்து ஆகியோர் இவரின் ஓவியங்களை வாங்கி இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 

ஓவியம், உலக மொழி. மலேசியாவிலும், உலக தரத்திலான ஓவியர்களும் ஓவியப் படைப்புகளும் இருப்பதால், மக்கள் உள்ளூர் ஓவியர்களின் கலை படைப்புகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். 

தமது இறுதி மூச்சு வரை ஓவியம் வரையவேண்டும் என்று ஆசைப்படும் இம்மாதிரியான ஓவியர்களை, நாம் தொடர்ந்து ஊக்குவிப்போம். 

--பெர்னாமா