Saturday, 24 Oct 2020
சிறப்புச் செய்தி
13/10/2020 08:21 PM

சைபர்ஜெயா, 13 அக்டோபர் (பெர்னாமா) -- ஓவியம், உலக மொழி. 

ஆயிரம் ஏடுகள் சொல்லும் கருத்தை ஒற்றை ஓவியம் உணர்த்திவிடும். 

அந்த வல்லமை ஓவியக் கலைக்கு மட்டுமே உரித்தானது. 

அதிலும், நவீன ஓவியங்கள் உணர்த்தும் கருத்துகளைப் புரிந்து கொள்வதும் தனிக்கலையாகும். 

நவீன ஓவியத்தில் பார்வையாளராக மட்டும் நாம் இருந்து விட முடியாது. 

மாறாக, அவ்வோவியங்களை நம் வாழ்வுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்படுத்தினால் மட்டுமே அதை ரசிக்க இயலும் என்கிறார் நவீன ஓவிய கலைஞர்.

சிலாங்கூர், காஜாங்கை சேர்ந்த ஜோர்ஜ் டேனியல் இந்நவீன ஓவித்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். 

ஓவியத்துறைச் சார்ந்தவர்கள் இவரை டேனி என்றே அழைக்கின்றனர்.

சமூக நலனில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், இளமை பருவத்தில் அரசாங்க சார்பற்ற அமைப்பின் வழி மறுவாழ்வு மையத்தில் தமது பணியை மேற்கொண்டார். 

ஆயினும், ஓவியக் கலையில் ஈர்க்கப்பட்டு, பின்னர் முழு நேரமாக இத்துறையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். 

அனுபவமே, சிறந்த புத்தகம். அவ்வகையில், தன் வாழ்க்கை அனுபவங்களை கொண்டு 4,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை படைத்திருக்கும் டேனி அவற்றை சைபெர்ஜெயா DANNY MODERN ART GALLERY-யில் பொது மக்களின் பார்வைக்காகவும் வைத்துள்ளார்.  

''வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில், கூடுதல் கற்பனையோடு ஓவியங்கள் வரையப்படுகின்றது. நம்மைச் சுற்றியுள்ள இயற்கை, மனிதர்கள் ஆகியவற்றை மையமாக கொண்டே ஓவியங்கள் வரையப்படுகின்றது.'' என்று என்று அவர் கூறினார்.

தமது 13-ஆவது வயதிலிருந்து ஓவியம் வரைய தொடங்கிய டேனி, பொருளீட்டும் நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், தமது மன நிறைவுக்காகவும் தூரிகைகளை ஏந்துகிறார். 

காகிதங்கள், கற்கள், காலி புட்டிகள் என கண்ணில் பட்டதெல்லாம் இவர் கைப்பட்டு ஓவியமாகிறது. 

சுவர்களும், சாலைகளும் கூட இவர் பார்வை பட்டு வியக்க தக்க புதுத் தோற்றம் பெறுகின்றது.. 

அவ்வகையில், சைபெர்ஜெயாவில் உள்ள சில பகுதிகளில் இவரின் மாறுப்பட்ட ஓவியங்களை நேரில் சென்று காணும் வாய்ப்பு பெர்னாமா தமிழ்ச் செய்திக்கு கிட்டியது. 

மாறுபட்ட ஓவியராக இருப்பதால், இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஓவியம் போலவே, இவருக்கும் இசையும் இன்னொரு விழியாக இருக்கின்றது. 

பல நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் ஓவியக் கலை, வாழ்வில் ஒரு பகுதியாக இருந்தால், வாழ்க்கை மேலும் இனிக்கும் என்கிறார் இந்தியர்களுக்கு புகழ் சேர்க்கும், டேனி.

பொழுது போக்காக தொடங்கிய கலை, தொழிலானது. நாளைய பெர்னாமா தமிழ்ச் செய்தியில் காணத் தவறாதீர்கள். 

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க