பொது

கொவிட்-19: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு

26/05/2020 08:03 PM

புத்ராஜெயா, 26 மே (பெர்னாமா) -- தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் கொவிட்-19 நோயினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். 

நாட்டில், இன்று, 187 புதிய கொவிட் 19 சம்பவங்கள் பதிவாகி, இந்நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,604-ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

இன்று பதிவாகிய எண்ணிக்கையில், 4 சம்பவங்கள் மட்டுமே உள்நாட்டினரை உட்படுத்தியதாகும். 

புத்ராஜெயாவில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் நோர் ஹிஷாம் இத்தகவல்களைத் தெரிவித்தார். 

இதனிடையே, மூன்று தொற்றுகளை உட்படுத்திய கட்டுமானப் பகுதிகளை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்று டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார். 

சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதிகளில் வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்து அந்நியத் தொழிலாளிகளை உட்படுத்தி 88 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். 

மே 26-ஆம் தேதி வரையில், 27 ஆயிரத்து 383 கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் அந்நிய தொழிலாளர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அவர் கூறினார். 

அவர்களின் தங்குடமிடம் நெரிசலாக இருப்பதுடன் போதுமான சுகாதாரத்தை பேணாத காரணத்தினால், அவர்களிடையே கொவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா