பொது

சட்டவிரோதக் குடியேறிகள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவர்

26/05/2020 07:59 PM

புத்ராஜெயா, 26 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்படாத சட்டவிரோதக் குடியேறிகளை, அந்தந்த நாடுகளுக்கு அரசாங்கம் திரும்ப அனுப்பவிருக்கிறது. 

திரும்ப அனுப்பப்படும் தங்களின் பிரஜைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் தூதரகங்களுடன் பேச்சுகள் நடத்தும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

இன்று காலையில், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தலைமையேற்ற சட்டவிரோத குடியேறிகளின் நிர்வகிப்பு குறித்த கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

செமினி, புக்கிட் ஜாலில் மற்றும் கேஎல்ஐஏ குடிநுழைவுத்துறையின் தடுப்பு முகாம்களில் இருக்கும் அனைத்து சட்டவிரோத குடியேறிகளுக்கும் கொவிட்-19 சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ள அரசாங்கம் முடிவுச் செய்திருப்பதாகவும் இஸ்மாயில் சப்ரி கூறியிருக்கிறார். 

புத்ராஜெயாவில், செவ்வாய்க்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி இத்தகவல்களைக் கூறினார். 

தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் கொவிட்-19 சிகிச்சை பிரிவு மற்றும் MAEPS எனப்படும் மலேசிய விவசாயக் கண்காட்சி மையத்தை தவிர்த்து, அந்நோய்த் தொற்று கண்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை தங்க வைப்பதற்கான இரண்டு மருத்துவமனைகளையும் அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கிறது. 

அடையாளம் காணப்பட்டிருக்கும், சுங்கை பூலோ, தொழுநோய் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமையின் பழைய மகப்பேறு கட்டிடம் ஆகியவை, ஆயிரத்து 430 நோயாளிகள் சிகிச்சைப் பெறுவதற்கான இடவசதியைக் கொண்டிருக்கின்றன. 

இதனிடையே, நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது எந்தவொரு பாரபட்சமும் காட்டப்படவில்லை. 

கொவிட்19 பெருந்தொற்றை துடைத்தொழிக்க, பிகேபிபியின் அமலாக்கத்தின் போது செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றும் பெரும்பாலான மக்களின் நன்மைக்காகவே அரசாங்கம் இந்நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இஸ்மாயில் சப்ரி திட்டவட்டமாக கூறினார். 

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க சட்டவிரோத குடியேறியவர்களை கைதுச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா