விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது

02/04/2020 07:41 PM

லண்டன், 02 ஏப்ரல் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திற்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டிருக்கிறது. விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. 

எனினும், கொவிட்-19 நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இப்போட்டியை நடத்துவது தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடா்பாக விம்பிள்டன் போட்டியின் தலைவர்களும், நிர்வாக அமைப்புகளின் பிரநிதிகளும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை இங்கிலாந்தில் மேற்கொண்டனர். அக்கூட்டத்தில் இப்போட்டியை ரத்துச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. 

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து ராணுவ, துணை ராணுவப் படை வீரா்கள் அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பில் தங்க வைக்கப்பட்டிருந்ததால் இப்போட்டி 1940-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. 

-- பெர்னாமா