அரசியல்

பிரதமரின் தலைமை அந்தரங்கச் செயலாளராக டாக்டர் மர்சுக்கி நியமனம்

05/03/2020 02:59 PM

புத்ராஜெயா, 05 மார்ச் [பெர்னாமா] -- தமது தலைமை அந்தரங்கச் செயலாளராக டத்தோ டாக்டர் மர்சுக்கி முஹ்மட்டை நியமிக்கப்படுவதற்குப் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் மர்சுக்கியின் நியமனம், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வந்திருக்கிறது.

நாற்பத்து ஆறு வயதுடைய டாக்டர் மர்சுக்கி, மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தில் அரசியல் - அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தில் அரசியல் - அறிவியல் துறையில் நிபுணத்துவப் பட்டமும் பெற்றவர் என்று, இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், பிரதமர்த் துறை அலுவலகம் தெரிவித்தது.

கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக டாக்டர் மர்சுக்கி பணியாற்றி இருக்கின்றார். 

அதன் பின்னர்க் கடந்த 2009ஆம் ஆண்டுத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரையில், துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரியாக இவர் பொறுப்பு வகித்திருந்தார். 

பின்னர் 2015-ஆம் ஆண்டு வரையில் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளராகவும் இவர் பணியாற்றியிருக்கின்றார்.

முகிடின் யாசின், உள்துறை அமைச்சராக இருந்தபோது, 2018 ஆம் ஆண்டில் அவரின் சிறப்புப் பணி அதிகாரியாக டாக்டர் மர்சுக்கி சேவையாற்றியிருக்கின்றார்.

-- பெர்னாமா