பாஸ் கட்சியின் நம்பிக்கை வாக்களிப்பு; எனக்குத் தெரியாது

 
 
 

சைபர்ஜெயா, 10 பிப்ரவரி [பெர்னாமா] -- தமது தலைமைத்துவம் தொடர்பிலான நம்பிக்கை வாக்களிப்பை மக்களவையில் தாக்கல் செய்ய, பாஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்த துன் டாக்டர் மகாதீர் முகமது, அவ்வாறு செய்வதற்கான அக்கட்சியின் நடவடிக்கைக் குறித்துத் தம்மிடம் கருத்து ஏதும் கிடையாது என்று தெரிவித்திருக்கின்றார்.

''அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் இப்போது பிரதமராக இருக்கின்றேன். அவர்கள் என்னை ஆதரிக்க விரும்பினால், அதற்கு நன்றி'', என்று டாக்டர் மகாதீர் கூறுகின்றார்.

அடுத்த மாதம் தொடங்க விருக்கும் மக்களவைக் கூட்டத்தில், டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு வழங்குவதென்று, பாஸ் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றம் முடிவு செய்திருப்பதாக, அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் சனிக்கிழமை கூறியிருந்தார்.

இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட விருக்கும் பாஸ் கட்சியின் நம்பிக்கை வாக்களிப்பின்போது, அம்னோவும் அதற்கு ஆதரவளிக்கப் போவதாக, அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் மறைமுகமாகக் கோடிக்காட்டி இருக்கின்றார்.

இதனிடையே, அமெரிக்கா காப்பற்றப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே, பதவி விலகுமாறு அதிபர் டோனல்ட் டிரம்பை தாம் கேட்டுக் கொண்டதாக டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

''நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சொல்லவில்லை. அதிபர் டிரம்பிற்குத் தொடர்பானதை மட்டுமே நான் கூறினேன். அமெரிக்கர்கள் நல்லவர்கள். ஆனால், அதிபர் டிரம்ப் அல்ல. நான் அவரைப் பதவி விலகக் கோரியது அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்குத்தான்'', என்று டாக்டர் மகாதீர் விவரித்தார்.

டிரம்ப் தவி விலக வேண்டும் என்ற டாக்டர் மகாதீரின் கோரிக்கைக்கு, மலேசியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் வருத்தம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கைத் தொடர்பில், அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

-பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்