Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இன உணர்வுகளைத் தூண்டி மலேசியர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காதீர்

10/03/2026 06:55 PM

புத்ராஜெயா, மார்ச் 10 - பல்லினத்தவர் வாழும் மலேசியாவில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் இன உணர்வுகளைத் தூண்டும் அறிக்கைகள், பதிவுகள் மற்றும் காணொளிகள் ஆகியவை அண்மைய காலமாக பகிரப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

குறுகிய மனப்பான்மைக் கொண்டு, இன உணர்வுகளைத் தூண்டுவதன் மூலமும் வெறுப்புணர்வைப் பரப்புவதன் வழியும் மலேசியர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

''யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணத்திற்கு 3ஆர் குறித்து தவறாக கருத்துகளை பேசினாலோ அல்லது வெளியிட்டாலோ அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கு முன்னர் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் தனித்துவமான வரலாறு மற்றும் சமூகக் கட்டமைப்பை அங்கீகரிப்பதோடு, அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிப்பதால், அதனை மீறாமல் இருப்பதை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

''நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டத்திற்கு அனைவரும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டவிதிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். அரசியலைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். எதற்குக் கவலைப்பட வேண்டும். எதற்குப் பயப்பட வேண்டும். வழிபாட்டுத் தலங்களை உடைக்க வேண்டாம். அது உங்கள் வேலையல்ல. சாலையோரத்தில் சண்டையிட வேண்டாம். அதுவும் உங்கள் வேலையல்ல. போலீசார் அதன் விசாரணையை மேற்கொள்ளட்டும்,'' என்று அவர் கூறினார்.

நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ ரமணன் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)