Ad Banner
Ad Banner
 பொது

மடானி புத்தகப் பற்றுச்சீட்டு: 22 லட்சம் மாணவர்கள் பயனடைவர்

30/06/2026 05:23 PM

கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு மடானி புத்தகப் பற்றுச்சீட்டு திட்டம், 22 கோடியே 16 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டின் வழியாக, கல்வி அமைச்சின் கீழ் உள்ள 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாணவருக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள மின்-பற்றுச்சீட்டுகளைப் பெறும் நடைமுறை, நாளை தொடங்கி அக்டோபர் 31-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் என்று கல்வி துணை அமைச்சர், வோங் கா வோ கூறினார்.

இடைநிலைப் பள்ளி, புகுமுக வகுப்பு முதல் ஆறாம் படிவம் வரை பயிலும் மாணவர்கள், தொழிற்கல்விக் கல்லூரி மாணவர்கள், மெட்ரிகுலேஷன் மாணவர்கள் மற்றும் மலேசிய ஆசிரியர் பயிற்சி கழகம், ஐ.பி.ஜி.எம் பயிற்சி ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 22 லட்சத்து, 17 ஆயிரத்து 579 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடையவிருக்கின்றனர்.

1,238 பதிவு செய்யப்பட்ட விற்பனை நிறுவனங்களைக் கொண்டுள்ள 'BookCapital' தளத்தின் மூலமாக மட்டுமே அப்பற்றுச்சீட்டுகளைப் பெற முடியும்.

''மேலும் இந்த ஆண்டு, வரலாறு, தத்துவம், பொருளாதாரம், புவிசார் அரசியல் மற்றும் மனித மூலதன மேம்பாடு போன்ற முக்கியப் பாடங்களில் கவனம் செலுத்தும் இலக்கியப் படைப்புகள் மற்றும் தலைசிறந்த படைப்புகள், பொதுப் புத்தகங்கள் உள்ளடக்கிய 'மடானியின் சிறப்புத் தலைப்பு' பட்டியலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது,'' என்றார் அவர்.

2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல், பயனர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது உள்ளிட்ட மதிப்பீடுகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)