ஜோகூர் பாரு, 30 ஜூன் (பெர்னாமா) -- அண்மையில் கெஅடிலான் கட்சியை விட்டு விலகி, ம.இ.கா-வில் இணைந்ததாகக் கூறப்படும் சில தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படாததால் ஏற்பட்ட ஏமாற்றமே, அவர்களின் அந்த முடிவுக்குக் காரணம் என்று கெஅடிலான் பொதுச் செயலாளர் டத்தோ ஃபுசியா சாலே தெரிவித்தார்.
''அந்த அறிக்கையில், மற்ற விஷயங்களுடன் சேர்த்து தங்களுக்குப் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்ததாகப் படித்தேன். எனவே, அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அங்கே அவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்'', என்றார் அவர்.
பணிநிமித்தமாக, ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள SDS Food நிறுவனத்திற்கு இன்று வருகை மேற்கொண்ட பின்னர், டத்தோ ஃபுசியா செய்தியாளர்களிடம் பேசினார்.
200 ஆதரவாளர்களுடன் தாமும் சேர்ந்து கெஅடிலான் கட்சியிலிருந்து விலகி, ம.இ.கா.வின் இஸ்கண்டார் புத்ரி தொகுதியில் இணையவிருப்பதாக, ஜோகூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவர் எம்.முருகன், கடந்த ஜூன் 28-ஆம் தேதி அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)