கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- 94 பாதுகாப்பு அம்சக் கூறுகளைக் கொண்ட அனைத்துலக மலேசிய கடப்பிதழின் புதிய பதிப்பை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அதன் விழாவில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோனுக்கும், குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் புதிய கடப்பிதழ்களை வழங்கினார்.
இப்புதிய கடப்பிதழின் அறிமுகம், நாட்டின் பயண ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு அதிக வசதியையும் கூடுதல் மதிப்பையும் வழங்குவதிலும் ஒரு முக்கிய முயற்சி என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
புதிய கடப்பிதழுக்கான விண்ணப்பங்கள் ஜூலை முதலாம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், விண்ணப்பதாரரின் தேவைகளைப் பொறுத்து இதற்கான செல்லுபடி காலம் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படும்.
பத்து ஆண்டுகளுக்கான கடப்பிதழ் அறிமுகப்படுத்தப்படுவதால் கடப்பிதழைப் புதுப்பிக்கும் இடைவெளி குறைவதுடன், பயணிகளுக்கான நேரமும் சேமிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் அனைத்துலகப் பயணங்களும் எளிதாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்கான கடப்பிதழின் கட்டணம் 350 ரிங்கிட்டாகவும், ஐந்து ஆண்டுகளுக்கான கடப்பிதழின் கட்டணம் 200 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் கடப்பிதழ் இன்னும் செல்லுபடியாக இருக்கும் பட்சத்தில், அதை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)