ரனாவ், 30 ஜூன் (பெர்னாமா) -- மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவைச் சேர்ந்த 24 ஊடகவியலாளர்கள், இன்று கினாபாலு மலையின் உச்சியை நோக்கிய தங்களின் மலையேறும் நடவடிக்கையைத் தொடங்கினர்.
பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் தலைமையிலான இந்த மலையேறும் நடவடிக்கையின் பங்கேற்பாளர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள் குறித்த விளக்கவுரை வழங்கப்பட்ட பின்னர், காலை மணி 9-க்கு Pondok Timpohon-இல் இந்நடவடிக்கை தொடங்கியது.
இரண்டு நாள்கள் மற்றும் ஓரிரவு நீடிக்கும் இந்நடவடிக்கையில், பங்கேற்பாளர்கள் உச்சியை நோக்கி மலையேறத் தொடங்குவதற்கு முன்னர் பனாலாபானில் இரவு தங்கி ஓய்வெடுப்பார்கள்.
பெர்னாமா ஊடகவியலாளர்களும் புகைப்படக்காரர்களும் பங்கேற்ற இந்த பயணம், ஜூன் 29 தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நீடிக்கும்.
''இன்று, ஜூன் 30ஆம் தேதி, பெர்னாமா பணியாளர்கள் 24 பேர் கினாபாலு மலையேறும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். 2026-ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு, இவ்வளவு பேர் கினபாலு மலையை ஏற முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும்'', என்றார் அவர்.
பெர்னாமா ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இப்பயணம், அந்நிறுவன ஊழியர்களிடையே குழுப்பணி உணர்வையும், உடல் மற்றும் மன வலிமையையும் மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசியாவின் மிக உயர்ந்த சிகரமான கினாபாலு மலை, கடல் மட்டத்திலிருந்து 4,095.2 மீட்டர் உயரத்தைக் கொண்டு மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிக உயரமான மலையாகத் திகழ்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)