கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- அதிக வருமானங்களைப் பதிவுசெய்த சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் தாங்கள் வழங்கிய வருமான வரியுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
மக்களின் வளர்ச்சித் தேவைகள் மற்றும் நல்வாழ்வின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சில மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், பான் பொர்னியோ நெடுஞ்சாலைகளையும் புதிய சாலைகளையும் மேம்படுத்துவது, நீர் வடிகால் அமைப்புகள், வறுமை ஒழிப்பு, பள்ளிகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்தின் அவசரத் தேவைகளின் அடிப்படையில் அரசாங்கம் நிதிப் பங்கீட்டை நிர்ணயித்துள்ளதாக இன்று, மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்கள் கேள்வி நேரத்தின்போது பிரதமர் விளக்கினார்.
''ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், இதற்கு முன்னரைக் காட்டிலும் கெடா, திரெங்கானு மற்றும் கிளந்தான் போன்ற மாநிலங்களுக்கு மடானி அரசாங்கம்தான் அதிகபட்ச நிதி ஒதுக்கீட்டை வழங்கியது என்பதை நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்'', என்றார் அவர்.
மேலும், 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு சிலாங்கூர் 4360 கோடி ரிங்கிட் வருமான வரியை செலுத்திய வேளையில் அம்மாநிலத்திற்கு மத்திய அரசாங்கத்தின் செலவு 1,500 கோடி ரிங்கிட்டாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை, அதே காலகட்டத்தில் கூட்டரசு அரசாங்கம் சுமார் ஒரு கோடியே 70 ஆயிரம்
ரிங்கிட் வருமான வரியை வசூலித்த நிலையில், அம்மாநிலத்திற்கான செலவினம் 790 கோடி ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)