Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்; எதிர்கொள்ள மாநில போலீஸ் தயார்

27/06/2026 06:31 PM

ஜோகூர் பாரு, 27 ஜூன் (பெர்னாமா) -- மாநிலத் தேர்தல் காலத்தில் ஜனநாயக செயல்முறை சுமூகமாக மட்டுமின்றி, அமைதியாகவும் கட்டுப்பாட்டிலும் நடைபெறுவதை உறுதி செய்ய, எவ்விதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஜோகூர் போலீஸ் தயாராக உள்ளது.

வேட்புமனு மையங்கள், முக்கிய சாலைகள், ஆதரவாளர்கள் கூடும் பகுதிகள் மற்றும் வாக்குப்பதிவு நாளில், வாக்குச் சாவடிகளில் நடத்தப்படும் சோதனைகள் உட்பட, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் அர்ஷாட் தெரிவித்தார்.

புத்ரி வங்சா சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செயல்முறை சீராக நடைபெறுவதைப் பாதிக்கக்கூடிய சம்பவங்கள் குறித்து எந்த அறிக்கைகளும் வரவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அவர் தெரிவித்தார்.

இன்று காலை நிலவரப்படி, தேர்தல் பிரச்சாரத்திற்காக, ஜோகூர் மாநிலம் முழுவதும் 26 அனுமதிகளை போலீஸ் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் கட்சி ஆதரவாளர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், சினமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், பிரச்சாரக் காலம் முழுவதும் பொது ஒழுங்கைப் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினார்.

''போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், முதலாவதாக, விவேகத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள். மேலும், ஜோகூர் மாநிலத்தில் பொதுப் பாதுகாப்பையும் ஒழுங்கையும் சீர்குலைக்கக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் உருவாக்காதீர்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அனைத்து விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள எங்கள் தரப்பில், நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்றார் அவர்.

தேர்தல் காலக்கட்டத்தில், குழப்பத்தை ஏற்படுத்தவோ அல்லது அதன் சுமுகமான செயல்பாட்டை சீர்குலைக்கவோ முயற்சிக்கும் எந்தவொரு கட்சி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரஹமான் எச்சரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)