Ad Banner
Ad Banner
 பொது

வியாபாரியைக் கொலை செய்ததால் ஆடவர் மீது குற்றச்சாட்டு

23/06/2026 06:38 PM

ஜாசின், 23 ஜூன் (பெர்னாமா) -- மலாக்காவில், ரிம் நகரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு முடிதிருத்தும் கடைக்கு முன்புறம், வியாபாரி ஒருவரைக் கொலை செய்ததாக, வேலையில்லாத நபர் ஒருவர் மீது ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டை நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் வாசித்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட 27 வயதுடைய பி. கோகிலநாதன், அதை புரிந்ததாகத் தலையசைத்தார்.

ஜாசின், தாமான் ரிம் பாருவில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்கும் முன்புறம், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு மணி 8.39 முதல் 11க்கு இடைப்பட்ட நேரத்தில் இன்னும் தலைமறைவாக இருக்கும் மூவருடன் இணைந்து 24 வயதுடைய எம். வினர்ட்டை கொலை செய்ததாக கோகிலநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபனமானால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை,

அல்லது அது விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 12 முறை பிரம்படி ஆகியவை தண்டனையாக விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், கோகிலநாதனிடமிருந்து எந்தவொரு வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

மேலும், தாமான் ஆசியா செலாத்தானில், 2024ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இரவு மணி சுமார் 7.30க்கு பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதாக கோகிலநாதன் மீது, அதே நீதிமன்றத்தில் மற்றொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 லிருந்து 15,000 ரிங்கிட் வரைக்குமான அபராதம், குற்றஞ்சாட்டப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கும் குறையாமல் வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெறவும் கொண்டிருக்கவும் தகுதி இழக்க வகை செய்யும் 2020ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட 1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 42(1)-இன் கீழ் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆபத்தாக வாகனத்தைச் செலுத்தியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 4,000 ரிங்கிட் தொகையில் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தாலும், கொலை குற்றச்சாட்டிற்காக அவர் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)